இராணுவத்தினரை படுகொலை செய்ததாக கூறும் கருணாவுக்கு ஆயுதம் கிடைக்கப்பெற்றமை குறித்து பிரதமர் பகிரங்க மேடைகளில் கருத்து கூறி வருகின்றார்.
எனவே கருணாவுடன் சேர்த்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் குற்றப்புலானாய்வு பிரிவு விசாரணை செய்ய வேண்டும் என அஜித் பீ. பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
கருணா இராணுவ வீரர்களைத் தாக்குவதற்கு ரணசிங்க பிரேமதாசவே ஆயுதம் வழங்கியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
தனக்கு ஆயுதம் கிடைக்கப்பெற்ற இரகசியம் குறித்து கருணா அம்மான் தனிப்பட்ட ரீதியில் பிரதமரிடம் தெரிவித்திருக்க கூடும். எனவே பிரதமரை ஒரு சாட்சியாளராக குற்றப்புலனாய்வு பிரிவு உள்வாங்க வேண்டும்.
கருணா அம்மான் இராணுவ வீரர்களை கொன்றதாக பகிரங்கமாக தெரிவித்திருக்கும் சந்தர்ப்பத்தில் அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்கள் உள்ளன.
இராணுவத்தினரை தாக்குவதற்கு புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்பதை பிரதமர் அறிந்திருப்பாரானால் ஆயுதங்கள் எவ்வாறு வழங்கப்பட்டன ? எவ்வகையான ஆயுதங்கள் ? யாரால் வழங்கப்பட்டது ? போன்ற தகவல் குறித்து பிரதமரிடம் விசாரிக்க முடியும்.
எனவே வழக்கு விசாரணையின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பிரதான சாட்சியாக உள்வாங்க முடியும்.
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பல்வேறு மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் கருணா அம்மானுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியாலோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாகவோ மன்னிப்பு வழங்கப்படிருக்க வில்லை.
எனவே அவர் இன்னும் மனிதப் படுகொலைக்கு பொறுப்பு கூற வேண்டிய பயங்கரவாதியாகவே கருதப்படுகிறார்.
இது போன்ற பாவச் செயல்களில் ஈடுபட்ட கருணா அம்மான் வாக்குமூலளித்த பின்னர் சுதந்திரமாக வீட்டுக்குச் செல்வாராயின் நாட்டில் சட்ட கட்டமைப்பு சீரழிக்கப்பட்டுள்ளதன் வெளிப்பாடகவே அமையும்.”என அவர் தெரிவித்தார்.



0 Comments