எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை நிச்சயம் பெறும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பி. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
பூண்டுலோயா கலப்பிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. அதேபோல் தேர்தல் களமும் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் சட்டமும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்தே கூடுதலான உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றம் செல்வார்கள். அதாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை நாம் நிச்சயம் பெறுவோம்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளது. தற்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. எனவே, யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டனர்.
அதேவேளை, எம்.சீ.சீ. விவகாரத்தை நல்லாட்சி எனக் கூறிக்கொண்ட அரசாங்கமே கையாண்டது. அதன்பின்புலம் தொடர்பில் எமக்கு தெரியாது. ஆனால், நாட்டு வளங்களை விற்பனை செய்வதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். " - என்றார்.



0 Comments