எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை கலைப்பதற்கு தாக்குதல் நடத்தாது மாற்று வழிகளூடாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னிலை சோசலிச கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கு சமூக இடைவௌியை பேணுதல் கட்டாயமானதாகும்.
ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவு பெற்றிருந்த போதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமையால் அதனை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
ஆர்ப்பாட்டகாரர்களே பொலிஸார் மீது முதலில் தாக்குதல் மேற்கொண்டமைக்கான ஔிப்பதிவு ஆதாரங்கள் காணப்படுகின்றன.
தாக்குதலை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியோ, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களோ பொலிஸாருக்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை.
தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதே தவிர எவ்வித உத்தரவின் பிரகாரமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒடுக்கப்படவில்லை.
இதற்கு மாற்றுவழிகளை திட்டமிடுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொரோனா ஒழிப்பிற்கான தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய எதிர்ப்பில் ஈடுபடுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.



0 Comments